திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 69 ஊராட்சிகளில் நாளை 23ந்தேதி (வெள்ளிக்கிழமை) மரக்கன்றுகள் நட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஜி.பழனி அறிவுறுத்தினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஜி.பழனி கலந்து கொண்டு பேசுகையில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் வழிகாட்டுதலின்பேரில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 69 ஊராட்சிகளிலும் ஒவ்வொரு வாரமும் பிரதி வெள்ளிக்கிழமை 500 மரக்கன்றுகள் வீதம் நட திருவண்ணாமலை வட்டாரத்தில் உள்ள அடிஅண்ணாமலை, காட்டாம்பூண்டி, நவம்பட்டு, ஆருத்ராபட்டு ஆகிய நர்சரியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 60 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நர்சரியில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை பெற்று பிரதி வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையேற்று உள்ளாட்சி பிரதிநிதிகளை பங்குபெற செய்து மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர் பேசுகையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முன்னேற்றம் காணவும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மாநில 6வது நிதிக்குழுவின் தவறுதலின்று ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தனிநபர் கழிவறை 100 சதவித இலக்கு அடைய ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி 100 சதவிதம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் கலந்து கொண்டு பேசுகையில் ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் ஊராட்சி மன்ற தலைவர்களை கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய உதவி பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.