ராமநாதபுரம், அக். 18- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் போக்குவரத்து துறை டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற் கொள்ளப் பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு புயல், வெள்ளம் போன்ற அவசர கால சூழ்நிலையை எதிர் கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக மேற் கொள்ளப் பட்டுள்ளன. மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக் கூடிய பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப் பட்டுள்ளன. இப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமைக்கப்பட்டு கள ஆய்வுகள் மதுலம் அந்தந்த பகுதிகளில் முந்தைய காலங்களில் ஏற்பட்ட தண்ணீர் தேங்கிய/ வெள்ள பாதிப்பு போன்ற நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்தும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் மழை, வெள்ளம் போன்ற பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தண்ணீர் தேங்காமல் விரைவாக வடிந்து ஓடும் வகையில் நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அதே போல் அவசர கால சூழ்நிலையில் மீட்பு பணிகளை மேற் கொள்ள ஏதுவாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் நிலை மீட்பு பணியாளர்கள் 132 கால்நடை மீட்பாளர்கள், 199 மரம் வெட்டும் நபர்கள், 21 பாம்பு பிடிக்கும் நபர்கள் கண்டறியப் பட்டு உரிய பயிற்சி வழங்கப் பட்டு தயார் நிலையில் உள்ளனர். இது தவிர அவசர கால சூழ் நிலையில் பொது மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 23 பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டடங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இம் மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டு உறுதி செய்யப் பட்டுள்ளன.
அதே வேளையில் பருவமழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக மொத்தம் 715 கொசுப்புழு ஒழுிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைளை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் சிகிச்சைக்காக வருபவர்கள் குறித்து விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு குறிப்பிட்ட ஏதேனும் கிராமத்தில் அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் முழுமையான துாய்மைப் பணி மேற் கொள்ள அலுவலர் களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
அதே போல் மொத்தம் 33 மருத்துவ குழுக்கள் அமைக்கப் பட்டு டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர் களுக்கும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள பணிகளை எவ்வித தொய்வு மின்றி விழிப்புடன் பணி யாற்றிட வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது, என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு நேரடியாக சென்று காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட நபர்கள் விவரம் குறித்து களஆய்வு மேற்கொண்டனர்.
இந் நிகழ்வுகளின் போது கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் சகபுத்திரன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன், இணை இயக்குனர் வேளாண்மை சொர்ணமாணிக்கம், மருத்துவ நல பணிகள் வெங்கடேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை சிவகாசமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.