ராமநாதபுரம், செப். 3- இந்தியாவில் நடக்கும் தொடர் கூட்டு படு கொலைகளை கண்டித்தும் மத ரீதியான தாக்குதலை கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அச்சமற்ற வாழ்வே! கண்ணியமான வாழ்வு!! என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சார கூட்டங்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நடத்தி நிகழ்ச்சியின் முடிவாக பொதுக் கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்தி உள்ளோம், என பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் முகமது அலி ஜின்னா கூறினார். ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் முன்னோர்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட நம் இந்திய தேசத்தை மதத்தின் பெயராலும், மாட்டின் பெயராலும் உடைத்தெறிய பாசிச சங்கபரிவார கூட்டங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதை விரும்பாத கூட்டங்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு இந்திய தேசத்தை சிதைத்து வருகின்றனர். இந்தியா முழுவதும் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் பலகீனமான பிரிவினர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது ஏதோ எதர்ச்சையாக நடைபெறுகின்றது என்று என்னும் அளவுக்கு மக்களின் மன நிலையை மாற்றும் முயற்சியையும் திட்டமிட்டு செய்து வருகின்றது. ஆனால் அடித்து படுகொலை செய்யப்படுவது என்பது அந்த குடும்பங்களின் பிரச்னை அல்ல. இது நம் சமூகத்தின் பிரச்னை. இது நாட்டின் பன்முகத்தன்மை என்ற எலும்பை முறிக்கும் பிரச்னை என்ற எண்ணம் வரவேண்டும். இந்தியாவில் நடக்கும் தொடர் கூட்டு படுகொலைகளை கண்டித்தும் மதரீதியான தாக்குதலை கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா “அச்சமற்ற வாழ்வே! கண்ணியமான வாழ்வு!!” என்ற தலைப்பின் கீழ் தேசம் தழுவிய பிரச்சாரத்தை 2019 ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடத்தியுள்ளோம். இதில் நிறைவாக பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது, என்றார். ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம்: ராமநாதபுரத்தில் நிறைவாக நடந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராகிம் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நியாஸ்கான், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட தலைவர் நுார் ஜியாவுதீன், எஸ்.டி.டி.யூ., கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹம்மது, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவிதன் மாவட்ட தலைவர் முகம்மது நிஜாம், பெண்கள் இந்தியாவின் மாவட்ட தலைவி சஹிலா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவி தஸ்லிம் பேகம் மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் பிரண்டின் மாவட்ட தலைவர் முகமது ஹாலிது ஆகியோர் வாழ்துரை வழங்கினர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் முகம்மது அலி ஜின்னா மற்று சோசியர் டெமாக்கரடிக் பார்டி ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் அகம்மது நவவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். செயற்குழு உறுப்பினர் பஷீர் நன்றி கூறினார்.