காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, மாவட்டத்தின் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மையப்பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் (கோயில் நிலம் 50ஏக்கர்), வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள கொளப்பாக்கத்தில் (பட்டா நிலம் 223ஏக்கர்) மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை மற்றும் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையை இணைக்கும் மேலைக்கோட்டையூர்-கல்வாய் சாலையில் உள்ள கீரப்பாக்கத்தில் சுமார் 900ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு நிலம் உள்ளது. எனவே மேற்படி 3 பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைக்க கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.*