ராமநாதபுரம், மே 10-
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொது மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்கப்பெறாமல் சிரமப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராக ராவ் உத்தரவின்படி குடிநீர் லாரி மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள சிறைக்குளம், பேய்க்குளம், உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த பொது மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்க பெறாமல் சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வரப்பெற்ற தகவலை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட கிராம பொது மக்களின் குடிநீர் தேவையினை உடனடியாக பூர்த்தி செய்திடும் வகையில் குடிநீர் லாரி மூலம் சுத்தமான குடிநீர் வினியோகத்திட ஊராட்சிகளின் உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் சிக்கலம், பேய்க்குளம், சிறைக்குளம் உள்ளிட்ட கிராம பொது மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் லாரி மூலம் சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தெரிவிக்கையில்:
கோடைக்காலத்தில் பொது மக்கள் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி துறை சார்ந்த அலுவலர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொது மக்களின் குடிநீர் தேவையினை பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 89.81 எம்எல்டி அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனை பூர்த்தி செய்திட ஏதுவாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 39 எம்எல்டி அளவிலும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 6.57 எம்எல்டி அளவிலும் என மொத்தம் 45.57 எம்எல்டி அளவில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொது மக்களின் தேவைக்கேற்ப உறைகிணறு, ஆழ்துளைக்கிணறு, திறந்தவெளிக்கிணறு, சுத்திரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் போன்ற பல்வேறு உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் 41.77எம்எல்டி அளவில் பொது மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பொது மக்களுக்கான குடிநீர் வினிேயாக திட்டங்கள் மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலமாக மொத்தம் 87.34 எம்எல்டி அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு சிரமமான கிராமங்களில் பொது மக்கள் பாதிக்கப்படாதவாறு குடிநீர் லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொது மக்கள் சிரமமின்றி குடிநீர் பெற்று பயனடைந்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் வினியோகம் நடைபெறும் பகுதிகளில் ஊராட்சிகளின் உதவிஇயக்குனர் கேசவதாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்.