ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக எபனேசர் அறிவிக்கப் பட்டுள்ளார்.
மேகலாயவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய மக்கள் கட்சியை முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து துவங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது முதன்முறையாக அறிமுகமாகி உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே தொகுதியில் மட்டும் போட்டியிட முடிவு செய்தது. அதன்படி ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட கட்சியின் மேலிடம் முடிவு செய்து அதற்கான வேட்பாளராக சாயல்குடியில் கல்வி நிறுவனம் நடத்தும் எபனேசர் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பை கட்சியின் தேசிய பொது செயலாளர் இந்திரா பகதுார் பாண்டே அறிவிப்பு செய்து வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்தார். மாநில தலைவர் சசிஹார்வின் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் எமர்சன், மாநில இளைஞரணி செயலாளர் ஸ்கார்வின், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பொன்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் தொகுதி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் எபனேசர் பி.எஸ்.சி., பட்டதாரி ஆவார். ஆசிரியர் தொழில் செய்து வந்த இவரது தாய் தந்தை இருவரும் ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது தனது சகோதரர் நடத்தும் பள்ளியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
வேட்பாளர் எபனேசர் கூறியதாவது:
ராமநாதபுரம் தொகுதியில் நான் வெற்றி பெற்று வந்தால் முதலில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். அதற்காக கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரிவு படுத்தி தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தடையின்றி கிடைக்க வழி வகுப்பேன்.அடுத்த படியாக இங்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் இளைஞர்கள் பலர் வெளி நாடுகளுக்கும், திருப்பூர், சென்னை போன்ற வெளியூர்களுக்கும் இடம் பெயர்ந்து செல்கின்றனர். இந் நிலையை மாற்ற இங்கு தொழிற் சாலைகள் துவங்க உரிய நடவடிக்கை எடுப்பேன். தற்போது பல தொழிலதிபர் களுடன் பேசி வருகிறேன். அவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலை துவங்கப் படும் என தெரி வித்துள்ளனர். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். இதற்காக குரல் கொடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாது காக்கவும், அவர்களது தொழில் பாது காப்பாக அமைய உரிய நடவடிக்கை எடுப்பேன். ராமேஸ்வரத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரயில்கள் அகல ரயில் பாதையாக மாறிய பின் நின்று விட்டன. நின்ற ரயில்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பேன். மக்கள் ஆட்சி நடக்கும் வகையில் செயல் படுவேன், என்றார்.