புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுகுள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகள் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
விமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடி இருந்தார்.
இந்த நிலையில் விமான தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர் ராகுல்காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்துவிட்டார். விமானப் படையின் துணைத்தளபதி உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்து கூற மறுத்து விட்டார். 300-350 பேர் உயிர் இழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?
இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?
இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.