சென்னை:
தனியார் கால்டாக்சி நிறுவனம் கார்களை போலவே ‘பைக் டாக்சி’ முறையையும் அறிமுகப்பத்தி உள்ளது.
இதன் ஆப்பில் பைக் டாக்சியை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வந்து அவர்களை செல்ல வேண்டிய இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஊழியர்கள் அழைத்து செல்வர்.
இந்த பைக் டாக்சி போக்குவரத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ‘பைக் டாக்சியாக இயங்கிய 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியில் ‘பைக் டாக்சி’ தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக அண்ணாநகர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தூர்வேல், செழியன், செண்பகவல்லி, நீலாவதி ஆகியோர் ‘பைக்டாக்சி’களை பறிமுதல் செய்ய அதிரடி திட்டம் வகுத்தனர்.
அவர்கள் வாடிக்கையாளர்கள் போல் குறிப்பிட்ட கால்டாக்சி நிறுவன ஆப்பில் ‘பைக் டாக்சி’ கேட்டு பதிவு செய்தனர்.
இதையடுத்து அண்ணா நகர், அண்ணா நகர் ரவுண்டானா, நியூ ஆவடி ரோடு ஆகிய இடங்களுக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட ‘பைக் டாக்சிகளை’ அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, தமிழகத்தில் பைக் டாக்சியாக மோட்டார் சைக்கிளில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்ல அனுமதி கிடையாது இதில் விபத்து நடந்தால் இன்சூரன்சு பெற முடியாது என்றார்.