புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இன்னும் 10 தினங்களில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
என்றாலும் பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் எதையும் ரத்து செய்யவில்லை. தொடர்ந்து தினமும் அவர் திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் இன்று மதி யம் அவர் 1 கோடி பா. ஜனதா தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந் துரையாடல் நடத்தினார். நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் காணொலி காட்சி மூலம் மோடியுடன் பேசினார்கள்.
உலக அளவில் இந்த காணொலி காட்சி நிகழ்ச்சி சாதனை படைப்பதாக கருதப்படுகிறது. இதுவரை எந்த நாட்டின் தலைவரும் ஒரே நேரத்தில் 1 கோடி பேருடன் கலந்துரையாடல் செய்தது இல்லை. இந்த கலந்துரையாடலை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
புதிய இந்தியாவை உருவாக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மத்திய அரசை மக்கள் நம்ப வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ்வோம். ஒன்றாக வளர்வோம். ஒன்றாக போரிடுவோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்.
இந்தியாவை பிரிப்பதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. அதற்கு பொதுமக்களாகிய நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. ராணுவத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதன் பிறகு பா.ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கியது. மாநிலம் வாரியாக பா.ஜனதா தொண்டர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் 600 இடங்களில் பிரதமர் மோடியுடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னையில் 16 இடங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் பா.ஜனதா தொண்டர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்கள்.
விருகம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அதுபோல தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு மோடியிடம் கேள்வி கேட்டனர்.
மோடியின் இந்த கலந்துரையாடலுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
நாட்டில் போர் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் அதை கவனிக்காமல் மோடி தேர்தல் பிரசாரம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.