‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தலைப்பு வைக்காத இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் அஜித்தைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்பதால், ஐதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர். ‘விஸ்வாசம்’ படமும் அங்கு படமாக்கப்பட்டது.
தற்போது நீதிமன்றம் சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் அஜித் பேசும் வகையில் நீண்ட வசனம் ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டார் அஜித் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவ்வளவு பெரிய வசனத்தை அஜித் ஒரே டேக்கில் பேசியதைப் பார்த்து, ஒட்டுமொத்தப் படக்குழுவும் எழுந்துநின்று கைதட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.