தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார் (50). மேலும் இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு வாரத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பிரச்சினைக் குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே செந்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் செந்தில், ஜெயக்குமார், மற்றும் அவரது நண்பரான காட்டுக்குறிச்சியைச் சேர்ந்த பிரவீன் (28) ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் கொடுப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். அங்கு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது பசுபதிகோவில் அருகே சென்ற போது சிலர் காரை வழிமறித்து அவர்களை ஆயுதங்களால் தாக்கிவுள்ளனர் அதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார், பிரவீன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஜெயக்குமார் என்பவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மேலும் பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அக் கொலைக் குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.




















