பாடியநல்லூர், மே. 16 –
ஆந்திராவிலிருந்து தமிழக எல்லை மார்க்கமாக தொடர்ந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கே சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கிபிடித்து அதில் பரிசோதனை செய்ததில் சுமார் 150 கிலோ எடை கொண்ட மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபடுத்திய கார் மற்றும் 7 நபர்களான கும்மிடிப்பூண்டி ஜிஆர் கண்டிகையை சேர்ந்த ஜமால் என்கிற ஹாசன் மொய்தீன் (34), மாபொசி நகரைச் சேர்ந்த ரமேஷ் (46) வள்ளியம்மை நகரைச் சேர்ந்த சிவசங்கர் (24), கோட்டை கரையைச் சேர்ந்த இப்ராஹிம் (56), சென்னை பாரதி நகரைச் சார்ந்த மோகன் (60), சென்னை வியாசர்பாடி சங்கர் (39) கோட்டை கரையைச் சேர்ந்த இப்ராஹிம் (44) ஆகிய நபர்களை கைது செய்து மாதர்பாக்கம் வனச்சரக அலுவலக அதிகாரி சுரேஷ் பாபுவிடம் ஒப்படைத்தனர்.