இராசிபுரம், மார்ச். 26 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மலைக்குறவர் இனத்தை சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கூடை நெய்யும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு தேவைகளுக்காக ஜாதிச் சான்று தேவைப்படுவதால் தாசில்தார், கலெக்டர் என உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் கடந்த பல ஆண்டாக விண்ணப்பித்து வருகின்றோம் ஆனால், இதுநாள் வரையில் ஜாதிச் சான்றுகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என மலைக்குறவர் இனமக்கள் புகார் எழுப்புகின்றனர்.
அருகேயுள்ள, சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் மற்றும் மலைக்குறவர்களுக்கு ST ஜாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எங்களுக்கு ஜாதிச் சான்று இதுவரையில் வழங்கப்படவில்லை என இப்பகுதி மலைக்குறவர் இன மக்கள் புகார் எழுப்புகின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ஜாதிச்சான்று இல்லாததால் பொதுத்தேர்வு எழுத முடியாமலும், கல்லூரி படிப்பை படிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவதால், சிறுவயது பெண்களை கட்டாயத் திருமணங்களுக்கு தள்ளும் சூழல் ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பும் அவர்கள் இந்தப் பகுதி குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும், கழிப்பிட வசதியும் இல்லாததால் பெண்கள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகி வருகின்றனர். என்பது போன்ற பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர்.
எனவே, எங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு ST., ஜாதிச்சான்றிதழ், பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.