திருவேற்காடு, ஏப். 02 –
தமிழகம் முழுவதும் கஞ்சா ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையை தமிழக போலீசார் எடுத்து வருகின்றனர் அதனடிப்படையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை வேட்டையாடி பிடித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் வகையில் வந்த திருவேற்காட்டை சேர்ந்த அன்புச்செல்வன்( 18) அஜித்குமார் (20) ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்ததில் இருவரிடமும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் திருவேற்காடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாணையில் கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது என்பது போன்ற கேள்விகளுக்கு கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் வயது (25 )என்பவரிடம் கஞ்சாவை வாங்கியதாக தெரிவித்தனர். இதனையடுத்து இருவரும் அளித்த தகவலின் பேரில் கரையான்சாவடி சென்ற திருவேற்காடு போலீசார் ராஜேஸ்குமாரை பிடித்தனர். உடன் கூட்டாளி ரியாஸ் ( 22) என்பவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து மொத்தமாக கிலோ கணக்கில் வாங்கி வந்து சில்லரையாக பிரித்து 1 பொட்டலம் 500 ரூ முதல் 800 ரூ வரை திருவேற்காடு, வேலப்பன்சாவடி, குமனன்சாவடி, கரையன்சாவடி, மாங்காடு மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கஞ்சா கடத்திய வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவேற்காடு போலீசார் சிறையில் அடைத்தனர்.