ராசிபுரம், மார்ச். 22 –
ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளின் மேற் கூரை குப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் வியாபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதற்கான சுங்கவரிக் கட்டணத்தை, நகராட்சியிடம் செலுத்தி வருகின்றனர். வியாபாரிகளுக்காக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இம் மார்க்கெட்டில் அதிகாலை 4 மணிக்கு வியாபாரிகள் வந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இரவு 10 மணி அளவிற்கு வீடு திரும்புகின்றனர். தினசரி மார்க்கெட் என்பதால் காலை வேளையில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ராசிபுரம் பகுதியில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தினசரி மார்க்கெட்டின் மேற்கூரை முற்றிலுமாக பெயர்ந்து விழுந்தது. மின்கம்பிகள் சாய்ந்தன.
இதில், வியபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. நள்ளிரவில் இந்த விபத்து நடந்ததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. மின் துண்டிப்பு செய்யப்பட்டு கூரையை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,
தினசரி மார்க்கெட்டில் மேல்கூரை அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்கள் ஏற்கனவே துரு பிடித்தவாறு பழுதான நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து நகராட்சியிடம் பலமுறை எடுத்துக் கூறியும் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது என்றனர்.






















