மன்னார்குடி, மார்ச்.10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்

திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு தளங்களுடன் கூடிய  திருமண மண்டபம் ஒன்று சுமார் 6000 சதுர அடி பரப்பளவில் கடந்த 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இருந்து வந்த நிலையில், அம்மண்டபம் தற்போது பழுது காரணமாக கடந்த 2014 இல் மூடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்தை புதுப்பித்து  மீண்டும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன் காரணமாக அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவில் திருமண மண்டபம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எம்.எல்.ஏ.டி.ஆர்.பி ராஜா உறுதியளித்தார்.

அவரின் உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக தற்போது  ராஜகோபாலசாமி கோவில் திருமண மண்டபம் ரூ 1 கோடியே 20 லட்சம்  மதிப்பில் புதுப்பிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதற்காக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டு திருமண மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் ரூ 1 கோடியே ,20 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா , மாவட்ட ஊராட்சி மற்றும் திட்ட குழு தலைவர் தலையாமங்கலம் பாலு , அறங்காவலர் குழு தலைவர் கருடர்  இளவரசன்   உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here