திருத்துறைப்பூண்டி, மார்ச். 3 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சுற்றுலாத்துறை மூலம் படகுக் குழாம் அமைத்து குழந்தைகள் படகு சவாரி ஏற்படுத்திட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட  மண்ணின் மைந்தர்கள் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் எடையூர் மணிமாறன் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அம்மனுவில் அவர்  மிகுந்த மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக திருத்துறைப்பூண்டி நகரம் விளங்குகிறது. குறிப்பாக ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியான அரசினர்  மேல்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்நிலை பதிவு அலுவலகம், கருவூல அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசினர் விருந்தினர் மாளிகை, நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள், அஞ்சல் துறை அலுவலகங்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகங்கள், வேளாண்மை பொறியியல் அலுவலகங்கள், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறை போன்ற அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலகங்கள், சிவன் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தலங்களும் சிறந்து விளங்குகின்ற  ஒரு முக்கிய பகுதியாக திருத்துறைப்பூண்டி விளங்கி வருவதாகவும்.

அதனால் தற்பொழுது திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவரின் பெருமுயற்சியால் திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிரவி மருந்தீசர் பெரிய கோயிலுக்கு சொந்தமான 3 1/2 ஏக்கர் அளவில் அமைந்துள்ள திருக்குளம் தூர்வாரப்பட்டு, சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, சுற்றுச்சுவர்கள் எழுப்பப்பட்டு, அலங்கார மின்விளக்குகள், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு ஒரு நல்ல பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளார்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருக்குளத்தில் குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சி, மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி மேம்பட செய்கின்ற வகையில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய, நேர்மறையான சூழல்களை உருவாக்கும் விதத்தில்  படகுக் குழாம் ஏற்படுத்தி குழந்தைகள் படகு சவாரி செய்வது போன்ற வசதிகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ஏற்பாடு செய்து தருமாறு திருத்துறைப்பூண்டி நகர்வாழ் மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here