தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 7 –
வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடைபெற்றது .
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆவடி பேருந்து நிலையம் எதிரில், தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் ஆவடி ராஜா தலைமையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகை மற்றும் ஊடகவியல் துறையில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களின் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு கண்டனக் குரல் எழுப்பினார்கள்.
மேலும், வேலூரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
முன் கள பணியாளர்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தும், அதற்கான தகுந்த பாதுகாப்பினை அரசு வழங்கிட வேண்டும் எனவும், கோரிக்கையை முன்மொழிந்து வலியுறுத்தினர்.
அரசு பத்திரிகையாளர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதை தமிழ்நாடு முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அவர்களை அடக்கி கருத்தியல் சுதந்திரத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்றும், அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
தமிழகத்தை எல்லாத்துறைகளிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக எடுத்துச் செல்ல முயற்சிக்கும் முதலமைச்சர் கருத்தியல் சுதந்திரம் கொண்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறைக்கும் அதில் பணிப் புரியும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உறுதியை வழங்கி இத் துறையையும் மற்ற மாநிலத்திற்கு முன் மாதிரியாக தமிழகம் விளங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்த போராட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் ஜான், டைம்ஸ் ஆப் தமிழ்நாடு நாளிதழ் செய்தியாளர் ஆவடி ராஜன், கேப்டன் டிவி செய்தியாளர் விக்கி, மற்றும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்