சென்னை:

பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் கிளாம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரும், டெல்லி பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மெரினா நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். கடற்படை பகுதியில் ஆள் இல்லாத குட்டி விமானம் திடீரென பறந்தது. 10 நிமிடங்கள் வரையில் வானில் வட்டமடித்து பறந்த அந்த குட்டி விமானம் பின்னர் மறைந்து விட்டது.

கடற்படையை சேர்ந்த அதிகாரி மோகித் இதனை பார்த்தார். பின்னர் அவர் இதுபற்றி கடற்படை தளத்தில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

இதுபற்றி கடற்படை இன்ஸ்பெக்டர் அனில் குமார், கோட்டை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த குட்டி விமானம் எங்கிருந்து வந்தது? ஆள் இல்லாத விமானத்தை ரிமோட் மூலம் இயக்கியது யார்? என்பது பற்றி தெரியவில்லை.

இதன் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்த கோட்டை போலீசுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆள் இல்லா விமானத்தை இயக்கியவர்களை கண்டுபிடிக்க போலீஸ் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here