ராமநாதபுரம், மார்ச் 23-

தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் மத்தியில் மே மாதம் புதிய ஆட்சி அமையும். இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியால் தமிழகத்தில் சுய ஆட்சி மலரும், என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.ராமநாதபுரம் நாடாளுமன்ற, பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதிகளில் போட்டியிடும் திமுக., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ராமநாதபுரத்தில் நேற்று மாலை நடந்தது. திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா.நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் சம்பத் குமார் ஆகியோரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: மதங்களை கடந்து சமூக நீதி காக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை திமுக., தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக் கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தான் மாறுபட்ட கூட்டணி அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் வாழும் நம் இடையே தேர்தல் வெற்றிக்காக சிலர் பிரிவினை ஏற்படுத்த பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக மகளிரணி தலைவர் கனிமொழி அறிமுகப்படுத்திய நவாஸ் கனி வெற்றிக்கனி பறிக்க ஒரு மித்த கருத்துடன் திமுக., காங்., கூட்டணியை வெற்றி பெற செய்வோம். 2004 நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதி தலைமையிலான கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வென்று மத்தியில் எவ்வாறு ஆட்சி அமைத்ததோ அது போன்று இந்த தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் வென்று இக்கூட்டணி புதிய வரலாறு படைக்கும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காண மத்தியில் புதிய ஆட்சி மே மாதம் அமையும். சட்ட மன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்வதன் மூலம் தமிழகத்தில் சுய ஆட்சி மலரும். இவ்வாறு பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here