கும்பகோணம், பிப். 21 –

கும்பகோணம் மாநகரம் என்பது சைவ மற்றும் வைணவ கோயில்கள் நிறைந்த கோயில் நகரமாகும். இந்நகரம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 113 பேர் 45 வார்டுகளில் வசிக்கின்றனர். கடந்த 1866-ம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949ல் இருந்து முதல் நிலையாகவும், 1974-ல் இருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வந்தது.

  கோயில் நகரமான குடந்தையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்கள், மடங்களும், பித்தளை பாத்திரங்கள், அலுமினிய பாத்திரங்கள் மற்றும் விளக்குகள், பஞ்சலோக சிலைகள் தயாரிப்புக்கு உலக பிரசித்தி பெற்றது. 

 குடந்தையில் நடக்கும் திருவிழாக்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக பெருவிழா முக்கியமானது. திருவிழாக்களில் ஒன்று. தென்னிந்தியாவின் கேம்ப்ரிட்ஜ் என்று போற்றப்படும் பழமையான அரசு கல்லுாரி, தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம், பள்ளிகள் அமைந்துள்ளது. 

 கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் முக்கியமானதாக திகழ்கிறது. இந்துக்கள், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் வசிக்கின்றனர்.

  கும்பகோணத்தை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம்தேதி தமிழ்நாட்டின் 16-வது மாநகராட்சியாக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து அக்டோபர் 15ம்தேதி  மாநகராட்சிக்கான தமிழ்நாடு அரசின் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

  புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சியில் தாராசுரம் பேரூராட்சி முழுமையாக இணைக்கப்பட்டு 48 வார்டுகளாக மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

  கடந்த 1996ம் ஆண்டு திமுக., வை சேர்ந்த மதுரம் பத்மநாபன், 2001ல் அதிமுக.சேர்ந்த, லதா மனோகரன், 2006ல் திமுக சேர்ந்த தமிழழகன், 2011ல் அதிமுக. சேர்ந்ந, ரத்னா சேகர் ஆகியோர் நகராட்சி தலைவர்களாக அலங்கரித்துள்ளனர்.

  இந்நிலையில்  மாநகராட்சி முதல் மேயர் பதவியை கைப்பற்ற கடந்த முறை நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றிய அதிமுகவும், தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவும் கடும் போட்டியில் உள்ளது.

மாநகராட்சி மேயர் பதவியை ஆளும் கட்சியான திமுகவினர் கைப்பற்றிட வேண்டும்,  திமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் மாநகராட்சி முதல் மேயர் பதவியை அதிமுக தான் கைப்பற்றிட வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

   இதற்காக மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் போட்டியிட்டுள்ள அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை கண்டிப்பாக வெற்றி பெறச் செய்யவேண்டும் என்ற இருதரப்பு கட்சி நிர்வாகிகளும் கடுமையாக உழைத்து வந்துள்ளனர்.

  மாநகர வாக்காளர்கள் முதல் மேயராக யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது நாளை வாக்கு எண்ணிக்கைக்குப் பின் தெரியவரும், கும்பகோணம் மாநகராட்சியை ஆளப்போவது யார் அதிமுகவா ? திமுகவா ? பொழுது விடிந்தால் புதிர் விலகும் ! ஆர்வத்துடனும் அதிகபட்ச எதிர்பார்ப்புடனும் ஆரவாரத்திற்காக காத்திருக்கும் இரு பெரும் கட்சிகளின் தொண்டர்கள் …   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here