மீஞ்சூர், மே. 09 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கடந்த 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மை பணியாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல் துறையினர் பள்ளியின் தாளாளர் சிமியோன் விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அச்சம்பவத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் மறுவாழ்வு சட்டத்தின்படி 3 நாட்களுக்குள் தலா 15 லட்ச ரூபாய் வழங்க உத்திரவிட்டுருந்த நிலையில், அக்கல்வி நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்க மறுத்ததால் அப் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அப்பள்ளியை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன்,  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பது அதிகம் எனவும், கல்வியில் முன்னேறிய மாநிலம் என சொல்லும் தமிழகத்தில் விஷவாயு தாக்கி உயிரிழப்பது வேதனை அளிப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் ஆணையம் சார்பில் தூய்மை பணியில் ஈடுப்படும் தொழிலாளர்களுக்கு முறையான உயிர் மற்றும் தேகப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அப்பணியில் ஈடுப்படும் தனியார் வேலை செய்பவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை எனவும், அதனால் அப்பணியில் ஈடுப்படும் தொழிலாளர்களின் இறப்பு சதவீதம் அதிகம் உள்ளதாக கூறினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் தகுந்த உபகரணங்கள் உள்ளன எனவும், குறைந்த விலையில் கழிவு நீரை அகற்ற தனியாரை நாடுவதால் உயிரிழப்பு அதிகரிப்பதாக அப்போது அவர் கூறினார். தூய்மை பணியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்,  அது போல தூய்மை பணியாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கழிவுநீர் தொட்டியில் இறங்க மாட்டேன் என்று உறுதி ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டால் கழிவுநீர் அகற்றுவதற்கு உரிய வழிகாட்டலும், உபகரணங்களும் வழங்கப்படும்; எனவும் தெரிவித்தார். கழிவுநீர் தொடர்பாக புகார் அளிக்க 104422 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கு தமிழக அரசு தான் காரணமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அரசு தொழிலாளர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் எந்த கூட்டமும் நடத்தவில்லை, முறையாக செயல்படவில்லை என அப்போது குற்றம் சாட்டினார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான உபகரணங்கள் தேவைப்படுவோர் ஆணையத்தை தொடர்பு கொண்டு தொழில் நிறுவனங்கள் அளிக்கும் கூட்டாண்மை சமூக பங்களிப்பு திட்டத்தில் இருந்து கிடைக்கும் நிதியில் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம் எனவும் அப்போது தெரிவித்தார்.

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கப்படாத உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது தெரிவித்தார்.

மேலும் இவ்வாய்வின் போது, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், பேரூராட்சியின் செயல் அலுவலர் வெற்றியரசு, மீஞ்சூர் ஆய்வாளர் சிரஞ்ஜீவி ,பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் அன்பாலயா சிவக்குமார், புதுப்பேடு பரமானந்தம்,அனுப்பம்பட்டு பாலமுருகன்,உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here