கும்பகோணம், ஜன. 16 –
கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அரை சவரன் சங்கிலி மற்றும் 49 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற 2 பேரை சோழபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் குடியானத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சோழபுரத்தில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வருகிறார். இந் நிலையில் அவரும், மகள் பிரியங்கா ( 28 ) என்பவரும் கடந்த 14ஆம் தேதி இரவு அவர்கள் வீட்டில் இருந்த போது, அவரது வீட்டிற்குள் புகுந்த ராமானுஜபுரத்தைச் சேர்ந்த கவியரசன் (24) மற்றும் நடையழகன் (24) ஆகிய இருவர் விஜயகுமாரின் மகள் பிரியங்கா அணிந்திருந்த ஆடையை இழுத்ததுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த அரை சவரன் சங்கிலியை கத்தியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டதுடன், பிரியங்காவின் தந்தை விஜயகுமாரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி 49 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து பிரியங்கா இன்று சோழபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விஜயகுமாரின் வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ராமானுஜபுரத்தில் பதுங்கியிருந்த கவியரசன், மற்றும் நடையழகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து அரை சவரன் சங்கிலி மற்றும் 49 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றியதுடன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.























