செங்கல்பட்டு, மே. 15 –
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட செங்கல்பட்டு நகர் முழுவதும் இந்நிலையத்தில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று துணை மின் நிலையத்தின் உள்ளே இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்து அதிலிருந்து ஆயில் வெளியேறியதால், அத் தீ பரவி அப்பகுதியில் உள்ள மரம் செடிகளும் தீ பற்றி மளமளவென எரிய துவங்கியது.
அதனைத்தொடர்ந்து அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மணல் மற்றும் தீயணைப்பான் மூலம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் அப்பகுதி முழுவதும் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் இல்லாததால் செங்கல்பட்டு நகரமே இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணையும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.