பழவேற்காடு, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும் விதமாக அங்கு வருகை தந்தனர்.
மேலும் ஆண்டு முழுவதும் அப்பகுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலத் தலமாக திகழும் பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு நூற்றுக்கணக்கானோர் அங்கு குடும்பத்துடன் வந்திருந்து மகிழ்ச்சியாக குழந்தைகளுடன் விளையாடி பொழுதுப் போக்கினை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த மக்கள் அப்பகுதிக்கு காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக வந்திருந்தனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம், சுற்றுலத்துறை போக்குவரத்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளூர் உள்ளாட்சி அமைப்பின் சார்பில் எவ்வித முன்னேற்பாடுகளாக குடிநீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை செய்து தராததால் அப்பகுதிக்கு வந்த சுற்றுல வாசிகள் உடல் உபாதைகள் கழிக்க இடமில்லாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். குறிப்பாக பெண்கள் சொல்ல முடியாத அளவிற்கு பாதிப்புக்குள்ளானதாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிநீருக்காக தவித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக்கடற்கரைப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரம் போக்குவரத்து வசதியில்லாததால் அவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் நிழற்குடை வசதிகள் இல்லாததும் அவர்களுக்கு மேலும் உடல் சோர்வை அளித்தது. அதனால் அவர்கள் இனிமையாக கொண்டாட வேண்டிய அவ்விழாவினை பெருத்த ஏமாற்றத்துடனும், கடினமான சூழல்களை எதிர் கொண்டும் அனுபவிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சிறப்பு பேருந்து வசதிகள் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்துகள் இயங்கியதால் கூட்டத்தில் சிறு குழந்தைகளுடன் முட்டி மோதி பேருந்தில் ஏற வேண்டியதாகவும் மேலும் பேருந்தில் இடமில்லாமல் களைப்புடன் நின்ற படியே பயணிக்கும் நிலை ஏற்பட்டுதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதுக்குறித்து உள்ளூரில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் போது இப்பகுதி இம்மாவட்டத்தில் நல்லதொரு சுற்றுலத்தலமாகும் இங்கு நாள்தோறும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வருகின்றனர். ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லாததால். இங்கு வருபவர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருவதாகவும் மேலும் சுற்றுலா பயணிகளை நம்பி இப்பகுதியில் தொழில் செய்யும் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் சுற்றுலத்தலத்திற்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேம்படுத்தினால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர் போன்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திட வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.