திருவள்ளூர், ஆக. 02-

19ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் சிறுவாபுரி முருகன் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு அளிக்கப்படவுள்ள பாதுகாப்பு மற்றும் அடிப்படை பயன்பாடு நடவடிக்கைகளின் முன் ஏற்பாடுகள் குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் இன்று அத்திருத்தலத்திற்கு நேரில் சென்று கோயில் நிர்வாகம் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 6 வாரங்கள் செவ்வாய்கிழமைகளில் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது அக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 19 ஆண்டுகளுக்கு பின்பு அதற்கான புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கடைசியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இம்மாதம் ஆக 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று யாக சாலை பணிகள், குடிநீர், கழிப்பறை, கும்பாபிஷேக நாளன்று எதிர்பார்க்கப்படும் பக்தர்கள் கூட்டம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்து வருவாய் துறை, அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு பாதுகாப்பாக வீடு திரும்பும்வரை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமலிருக்க முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here