பொன்னேரி, ஏப். 16 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடியில் 1200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோயில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு அதன் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருட கொடி வெகு விமர்யையாக ஏற்றப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை பிரமோற்சவத்தின் 5-ஆம் நாள் இரவு கருடோற்சவம் நடைபெறும். அப்போது பொன்னேரி கும்பமுனிமங்கலம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரரும், கரி கிருஷ்ண பெருமானும் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவம் நடைபெறும்.
இது இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறாத அற்புத நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 7-ஆம் நாளில் கரி கிருஷ்ண பெருமாளின் தேரோட்டம் நடைபெறும். தீர்த்தவாரியுடன் சித்திரை பிரமோற்சவ விழா நிறைவடையும்.