திருவாரூர், மே. 21 –
சிறைச்சாலையில் 6 கைதிகளுக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தததும், ஒண்றிணைந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழத் திட்டம் தீட்டிவுள்ளனர். அதன்படி சிறையை விட்டு வெளி வந்ததும் அவ்வுல்லாச வாழ்க்கையை வாழ தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினரிடம் 40 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 3 இலட்சம் பணத்துடன் மாட்டிக் கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விஜய் மற்றும் பிரதாப் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டில் திருவாரூர் அருகே உள்ள கூடூர் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். ஒன்றில் நடைப்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டபோது தடுக்க வந்த கட்டிட உரிமையாளரை ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் தொடர் திருட்டு வழக்கில் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளனர். அப்போது சிறைச்சாலையில் இருந்த நான்கு கைதிகளுடன் இவர்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நட்பின் அடிப்படையில், அவர்கள் ஆறு பேரும் ஒன்றுக்கூடி சிறைச்சாலையை விட்டு வெளிச்சென்றவுடன்தொடர்கொள்ளைகளில் ஈடுப்பட்டு உல்லாச வாழ்க்கை வாழ திட்டம் தீட்டிவுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆறு பேரும் வெளியே வந்தவுடன், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளை நோட்டமிட்டு அதில் வெளியூர் சென்று இருக்கும் நபர்களின் வீடுகளில் இரவு நேரத்தில் கொள்ளையில் ஈடுபடுவதென திட்டம் வகுத்து அதன்படி, அவர்கள் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் இவர்கள் இக்கொள்ளையில் ஈடுப்படுவதற்கான திட்டங்களை பெரும்பாலும் இவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது வகுத்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபாதிமங்கலம் பகுதியில் இவர்கள் ஒரு வீட்டில் திருடி உள்ளனர். அதுப்போன்று தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆலிவலம் வடபாதிமங்கலம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இரவு நேரங்களில் தொடர் கொள்ளை சம்பவத்தில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்படும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் அத்தனிப்படை ஈடுப்பட்டுவந்துள்ளது.
இச் சூழலில், சமீபத்தில் வடபாதிமங்கலம் பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு குறித்த விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்ட போது வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதாகி உள்ள அதே பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரதாப் ஆகியோரின் செல்போன் எண்கள் சமீபத்தில் வடபாதிமங்கலத்தில் நடந்த திருட்டு சம்பவத்தின் போது பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரதாப் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற அஜித் நாகை மாவட்டம் தென்புலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் மகேஷ் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த எபினேசர் ஆகிய ஆறு குற்றவாளிகள் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களிடம் இருந்து இவர்கள் திருடிய 55 சவரன் தங்க நகையில் 40 சவரன் தங்க நகையும் 4.5 லட்சம் ரூபாயில் மூன்று லட்ச ரூபாயும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ள இந்த கும்பல் திருடிய தங்க நகை மற்றும் பணத்துடன் கோயம்புத்தூருக்கு சென்று அங்கு பணத்தை செலவு செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பாக நகையை இவர்கள் உடனடியாக விற்பதில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக நகைகளை விற்பனை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் தாமதமாகவே விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் பணம் தீர்ந்தவுடன் மீண்டும் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார். மேலும் திருத்துறைப்பூண்டி மருத்துவர் வீட்டில் திருடிய குற்றவாளிகளை நெருங்கி வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.


























