காஞ்சிபுரம், செப். 05 –
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி மஹா சம்ரோஷணை கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு அன்று ஆசார்யவர்ணம், பகவத் பிரார்த்தனை, மிருத சங்கிரகஹணம், அஸ்குரார்பணம், வாஸ்துஹோமம், ததுந்தஹோமம், சத்யபூர்ணாஹீதி நடைபெற்றது. தொடர்ந்து 4 ஆம் தேதி நேற்று அக்னீபாராயணம், ததுத்தஹோமம், என மூன்று நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் இன்று 5 ஆம் தேதி காலை சத்திபுண்யாவாசனம், சர்வப்ராசித்தஹோமம், யத்ரதானம் மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாக சாலையில் இருந்து சிவச்சாரியர்கள் கடங்களில் எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் கோவில் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தேறியது. தொடர்ந்து இப்புனித தீர்த்தம் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் சிறப்பு அழைப்பாளராக வருகைப் புரிந்து சாமிதரிசனம் செய்தார். மேலும், சாலவாக்கம் ஊரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக வந்திருந்தனர்.