திருவாரூர், ஜூன். 22 –
திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது திடீரென மயங்கி விழுந்ததால் அம்முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் வட்டம், புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் புலிவலம், வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
தொடரந்து வருவாய்த்துறை சார்பில் 60 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா, 98 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 30 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், என மொத்தம் 236 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது, மாவட்ட ஆட்சியர் காயத்ரிக்கு மயக்கம் ஏற்பட்டு கீழ விழப் போனார். அவரை அருகில் இருந்தவர்கள் கீழே விழாமல் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பிய அவர் மீண்டும் நலத் திட்ட உதவிகளை வழங்கிச் சென்றார். கூட்ட நெரிசலால் மாவட்ட ஆட்சியர் காயத்ரிக்கு மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் உடல்நலத்துடன் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.