திருவண்ணாமலை, செப்.3-

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் செயல் படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் இது வரை ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவி சரஸ்வதி ரங்கசாமி, இணை ஆணையர் ஏ.என்.ராஜ் சரவணகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
பின்னர் பெருங்கட்டூர் அரசு மாதிரி பள்ளியில் இயங்கும் மாணவர் விடுதி, அத்திப்பட்டு கிராமத்தில் செயல்படும் புனித வளனார் குழந்தைகள் இல்லம் குறிஞ்சி ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் நேயமையம் ஆகியவற்றையும் ஆணைய தலைவி சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, போளூர் டிஎஸ்பி அறிவழகன், குழந்தைகள் பாதுகாப்பு டிஎஸ்பி ராஜகாளீஸ்வரன், கலசபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் ஜனார்தனன், ஆணையாளர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆணையத் தலைவி சரஸ்வதி பேசுகையில்
ஜவ்வாதுமலை பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகளவு நடந்து வருகிறது. ஆனால் ஒருசில புகார்கள் மட்டுமே வருகிறது. மற்றவை மறைக்கப்படுகிறது. ஏதோ நல்லது செய்வதாக நினைத்துக கொண்டு குழந்தைகள் எதிர்காலத்தை இங்குள்ளவர்கள் பாழாக்கி வருகின்றனர் இது தவறு என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் ஊராட்சி மன்ற தலைவர் கிராம நிர்வாக அலுவலர் கிராம செவிலியர் தலைமை ஆசிரியர் அங்கன்வாடி பணியாளர் என 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். இவர்களில் ஒருவராவது குழந்தைகளுக்கு எதிராக எந்த குற்றங்கள் நடந்தாலும் அதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார் அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஒன்றியகுழு தலைவர் ஜீவா மூர்த்தி கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here