செங்கல்பட்டு, மே. 25 –
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள அரைப்பாக்கம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வூர் ஊராட்சி சார்பில், இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் சரிவர வழங்கப்படாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வூரில் நிலவும் இக்குடிநீர் பிரச்சினைக் குறித்து தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்துடன் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும், எடுக்கவில்லை என அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அவ்வூர் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்கிடக்கோரியும், அவ்வூர் மக்கள் ஒன்று திரண்டு இன்று மேலவளம் பேட்டை – To திருக்கழுக்குன்றம் சாலையில், 200க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் சாலையில் படுத்துப்புரண்டுக் கொண்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் அரைமணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இச்சாலை மறியல் போராட்டம் குறித்து தகவலிறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் அவ்வூர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர். மேலும், ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி முறையாக குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்த உறுதிமொழியினை ஏற்று, அவ்வூர் மக்கள் அச்சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.