பொன்னேரி, ஏப்.1 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி கள்ளுக்கடை மேடு ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கையில், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட தாங்கள் வசிக்கும் அரசு வனத்துறை அலுவலகம் அருகில் கிறிஸ்டியன் காலேஜ் என்ற பெயரில் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க 2 சென்ட் நிலத்தை அப்பகுதியில் முதலில் கையகப்படுத்தி தற்போது 3.80 எக்டர் நிலத்தை எந்த விதமான அரசு அனுமதியும் இல்லாமல் கையகப்படுத்தி உள்ளது.
காலம் காலமாக அப்பகுதியில் வசித்து வந்த எங்கள் வாழ்விடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் முள்புதர்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கிறது .இப்பகுதியில் எங்களால் பயமின்றி வாழ முடியவில்லை எனவும் .அந்த பகுதிகளில் எங்களுடைய பெண்கள் சென்றால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் எனவும் குற்றம் சாட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றி தாங்கள் வாழ்வதற்கு ஏதுவாக வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் எனத்தெரிவித்தனர்.
இதுக் குறித்து பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் வருகின்ற 6ஆம் தேதி இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பழங்குடியின மக்கள் கலைந்து சென்றனர்.