தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் சுவாமிகள் வீதி உலா வர மங்கள இசையுடன் கோலாகலமாக அவ்விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப் பல்லக்கு திருவிழா வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று விமரிசையாக நடைபெறும்
சைவநெறியை போற்றி வளர்த்த நால்வர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் முக்தி அடைந்தநாளை தஞ்சாவூர் மக்கள் ஆண்டுதோறும் முத்துப் பல்லக்கு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்
தஞ்சை நகரில் உள்ள முருகன் கோயில், சுப்ரமணியர் ஆலயம், விநாயகர் கோயில் என 15 கோயில்களில் இருந்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் ஒரு புறம் விநாயகர், முருகன் சுவாமி சிலைகளும் , மறுபுறம் திருஞானந்த சம்பந்தரின் திருஉருவப் படத்தையும் அலங்கரித்து முத்துப் பல்லக்கில் அதிகாலை முதல் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி என 4 பிரதான வீதிகளிலும் சுவாமிகள் மங்கள இசை முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.