பொன்னேரி, மே. 11 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று .நடப்பாண்டும் சித்திரை திருவோணத்தில் கடந்த 4-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து, விழாவின் 5 – வது நாளன்று, வேறுயெங்கும் காண முடியாத வைபவமாக அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாளும், ஸ்ரீஅகத்தீஸ்வரரும் சந்திக்கும் நிகழ்வு இங்கு நடைபெற்றது.
இந்த நிலையில் இவ்விழாவின் 7-ஆம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. கோயிலின் விமானம், கொடி மரம், தேர் ஆகியவை ஒரே அளவாக இருப்பது ஐதீகம். அவ்வகையில் 36 அடி உயரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கரிகிருஷ்ண பெருமாள், அத்திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் இத்திருத்தேரில் நகர் வலம் வரும் பெருமாளை தரிசித்தால் இந்த பிறவி மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் நற்பயன்கள் கிட்டும் என அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
முன்னதாக, சண்டமேளம் முழங்க, பெருமாளுக்கு ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது குவிந்த பக்தர்கள் “கோவிந்தா” “கோவிந்தா” என்றவாறு பக்தி பரவசத்துடன் மனமுவர்ந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, அத்திருத்தேரை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன், வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் வெள்ளையன், பொன்னேரி நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், துணைத் தலைவர் விஜயகுமார், பொன்னேரி திமுக நகர செயலாளர் ரவிக்குமார் அதிமுக நகர செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட அப்பகுதி வியாபார சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அத்திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தொடர்ந்து .முக்கிய மாட வீதிகளின் வழியாக சென்று பின்னர் மாலை அத்திருத்தேர் நிலையை வந்தடைந்தது. இந்த நிகழ்வின் போது பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. பிரமோற்சவத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





















