கும்பகோணம், ஜூலை. 05 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் வடக்கு வீதியில் வசிப்பவர் மோகன் வயது 70 இவர் ஓய்வுபெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் ஆவர். மேலும் தற்போது நுகர்வோர் சங்க நிர்வாகியாக உள்ளார். தனது வீட்டின் முன் பகுதியில் சங்க அலுவலகம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் குடியிருப்பவர்கள் இடம் வீட்டு வாடகை தொகையாக ரூ.20 ஆயிரம் வசூலித்துள்ளார். இத் தொகையை அலுவலக மேஜை மீது வைத்து விட்டு பின்புறத்திற்கு சென்றுள்ளார். அதன் பிறகு வந்து பார்த்த போது மேஜை மீது வைத்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் தனது வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் விசாரித்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் மோகன் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து விசாரித்து வந்த திருப்பனந்தாள் காவல்துறையினர் அலுவலகத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் கோடாலி கருப்பூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பகவதி, கோடாலி கருப்பூர் ரைஸ் மில் தெருவை சேர்ந்த சஞ்சீவி மகன் வல்லரசு, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து திருப்பனந்தாள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரொக்க பணத்தை மீட்டு ஓய்வு பெற்ற நுகர் பொருள் வாணிப கழக ஊழியர் மோகனிடம் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் நுகர் பொருள் வாணிப கழக அலுவலகத்தில் 20 ஆயிரம் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திருட்டு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்த காவல்துறையினர் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.