கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில் மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து வருவதாக சோழபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை உதவி ஆய்வாளர் சற்குணன், தலைமை காவலர்கள் கார்த்தி, தேவேந்திரன், இளையராஜா, சிலம்பரசன் ஆகியோர் மஃப்ட்டியில் சென்று அங்கு மினி சரக்கு வாகனத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் புகையிலை பொருட்களை கைமாற்றி கொண்டிருந்ததை பார்த்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சோழபுரம் அய்யாநல்லூரை பரமேஸ்வரன், என்பவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 80 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் மினி வேன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பரமேஸ்வரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கும்பகோணம் மாத்திகேட் வெள்ளாளர் தெருவில் உள்ள குடோனில் மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 89 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 583 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், பரமேஸ்வரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகையிலை பொருட்கள் கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்த ரஞ்சித் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.