பழவேற்காடு, ஏப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழவேற்காடு சுற்றி சுமார் 30 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும்,  மற்றொரு பிரிவினர் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடி தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் பாரம்பரியமாக பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட அப்பகுதி மீனவர்கள் அலறியடித்தபடி சென்று தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். எனினும் மீன்பிடி வலைகள் அனைத்தும் முற்றிலும்மாக எரிந்து நாசமானது.

மேலும் 40 மீனவர்கள் ஒன்றாக குழுவாக இணைந்து ஏரியில் சென்று மீன்பிடி தொழில் செய்யக்கூடிய பாடிவலைகள் எனப்படும் இரு பிரிவினரின் வலைகள் அந்த பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் முற்றிலுமாக அவைகள் தீயில் எரிந்து நாசமானது.

மீன்பிடி வலைகள் மட்டுமின்றி இறால் பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் என சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அத் தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அத் தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் மீனவர்களின் மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here