கும்பகோணம், ஜன. 18 –
டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவர் த பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும், கொரோனா பரவலை காரணம் காட்டி திருக்கோயில்களை மூடும் தமிழக அரசு, அதே நேரத்தில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி அரசு மதுபான கடைகளை மட்டும் திறந்து வைப்பது ஏன் என்றும், கேள்வியொழுப்பினார். ஆன்மீக விசயங்களில் தமிழக அரசு விளையாடுகிறது என்றும், பிற மாநிலங்களை போல இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அரசு மதுபான கடைக்கு வர அனுமதிக்க வேண்டும் என தமிழகரசை வலியுறுத்தினார். அதே போன்று இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த, அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவர் த பாலசுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்தார்.
அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவரும், மாநில தலைவருமான த பாலசுப்பிரமணியம், தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவும், கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியில் தஞ்சை மண்டல தலைமை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று கும்பகோணத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த த. பாலசுப்பிரமணியம்,
மத்திய மாநில அரசுகள், கும்பகோணத்தை ஆன்மீக நகரமாக அறிவித்திட வேண்டும், தமிழக அரசும், தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட தனி வருவாய் மாவட்டம் அமைத்திட வேண்டும் என்றும், ஓய்வு பெறும் நிலையில் உள்ள அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, சமீப நாட்களாக, விதிமுறைகளுக்கும், சட்டத்திட்டங்களுக்கும் எதிராகவும், பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு தனிச்சையாக நியமனம் செய்து வருகிறார், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,
காலியாகவுள்ள மயிலாடுதுறை, நாகை மண்டல இணை ஆணையர் பணியிடங்களை விரைந்து தமிழக அரசு நிரப்பிட வேண்டும் என்றும், அரசு மதுபான கடைகளுக்கு எந்த வித கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இன்றி இயங்கும் நிலையில், கோயில்களை மட்டும் மூடி வைப்பது ஏற்புடையது அல்ல, குறிப்பாக தைப்பூச திருநாளில் பூட்டி வைத்திருப்பது வேதனையளிக்கிறது, கிருஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு நாட்களில் குறைவான எண்ணிக்கையுடன் பிராத்தனைகள் நடத்திட அனுமதி அளித்த அரசு, ஆனால் பொங்கல் மற்றும் தைப்பூச தினத்திலும் இந்துக்கள் யாரும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய முடியாதபடி, தொடர்ந்து 5 நாட்கள் தரிசன அனுமதியை ரத்து செய்து இருப்பது இந்த அரசு ஆன்மீகத்துடன் விளையாடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அரசு மதுபான கடைக்கு வருவோருக்கு இரு தவணை தடுப்பூசி அவசியம் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும், அதே நிலையில் இரு தவணை செலுத்தியவர்களை கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசர்கள் ஆண்ட காலத்தில் பல்வேறு காலக்கட்டத்தில் போர் நடைப்பெற்றது அப்போது கூட ஆலயங்கள் இடிக்கப்படவில்லை, ஆனால் அரசிற்கு பல கோடி வருவாய் திருக்கோயில்களில் பக்தர்களின் காணிக்கை வாயிலாக கிடைக்கும் நிலையில், தமிழக அரசு பல கோயில்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கிறது இது வன்மையாக கண்டிக்கதக்கது, பல அரசு துறைகள் கோயில் இடங்களில் தான் உள்ளது என்றும், கோயில் அர்ச்சகர்களுக்கு தமிழக அரசு, துணிகள், மானியம், உதவித்தொகை வழங்கியது பாராட்டுக்குரியது அதே வேளையில் இதற்கு நிரந்தர தீர்வாக, அவர்களது மாதாந்திர சம்பளத்தை ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்திட வேண்டும், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்திட வேண்டும், அறநிலையத்துறைக்கு கோயில் செயல்பாடுகளை கண்காணிக்க மட்டுமே உரிமை உள்ளது, கோயில் நிர்வாகத்தை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும், அனைத்து கோயில்களிலும், அறங்காவலர் குழுவை நியமிக்க அரசு விரைந்து முன்வர வேண்டும் என்றும் த பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார் பேட்டியின் போது அவருடன் மாநில செயலாளர் இராம நிரஞ்சன் உடனிருந்தார்.