கும்பகோணம், பிப். 04 –

கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில்  முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று, காவிரியாற்றில் எழுந்தருள, அப்போது, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தைப்பூச தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமாகவும், மத்தியார்ஜுன ஸ்தலமாகவும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் அத்திருக்கோயில் விளங்கி வருகிறது.

மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். அதுபோன்று இவ்வாண்டும் இப்பெருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும், தைப்பூச பெருவிழாவின் முக்கிய விழாவாக நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா சப்பர தேர் பஞ்சரத திருத்தேரோட்டம் என வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில்,  இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

முன்னதாக திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதினம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோயிலிருந்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட வச்சவர்கள் விசேஷ வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் கோயிலில் இருந்து நான்கு வீதிகள் வழியாக  காவிரி தைப்பூசப் படித்துறையில் எழுந்தருளினார்கள்.

அதனைத்தொடர்ந்து அஸ்திர தேவருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களோடு, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன், ஓதுவார் மூர்த்திகள் திருவாசக பதிகங்கள் பாடிட சிவ வாத்தியங்கள், நாதஸ்வர மேல தாளங்களுடன் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் நீராடி வழிபட்டனர். இதில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறை ,சுகாதாரத்துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு தொண்டுநிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here