கும்பகோணம், ஜன. 22 –

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில், தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பிடிப்பட்டன.

திருவிடைமருதூர் தாலுகா மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5-ந் தேதி நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடைப்பெற்றது.

இதில், சட்ரஸ் பகுதி சேதமடைந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி நகரை சேர்ந்த 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் திருவிடைமருதூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத் உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை குழு அமைக்கப்பட்டது.

இத் தனிப்படையினருடன், துப்பறியும் நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினரும் ஒன்றாக சேர்ந்து, அப்பகுதியில் தீவிர சோதனைகளை மேற் கொண்டனர்.

மேலும், வெடிகுண்டு வெடித்த சம்பவ இடமான சட்ரஸ், கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தர்மராஜ், சரண்ராஜ், முருகனின் அக்கா மகன் சக்திவேல் மற்றும் சக்திவேல் நண்பர் சரவணன் ஆகிய 5 பேரின் வீடுகளிலும் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த மூலப்பொருட்களான சைக்கிள் பால்ரஸ், ஆணிகள் மற்றும் பட்டாக்கத்திகள் ஆகியவற்றை அத்தனிப்படை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினார்கள்.

மேலும் அத்தனிப்படையினர் நடத்திய தீவிர சோதனையால் நடைப்பெற இருந்த பெரும் குற்றச்செயலின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை வட்டாரத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here