கும்பகோணம், நவ. 10 –
கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை என்ற ஊரில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில் 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் டெல்டா மாவட்டங்கள் தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை தற்பொழுது வரை இடைவிடாமல் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்த கன மழையால் தேனாம்படுகை ஊராட்சியில் கௌதமன் என்பவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொழுது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இதில் கௌதமனுக்கும் மகள் அனன்யாவுக்கு (4) காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அனன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதைப்போன்று பெருமாநல்லூர் பெரியார் நகரில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் (கணவன் மனைவி) இருவருக்கும் காயம். ஏற்பட்டு கனகராஜ் 37, சுந்தரி 32. ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.