தஞ்சாவூர், ஏப். 21 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் பணி புரிந்து வரும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 2021 – 22 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் தேர்வு செய்திடும் பொருட்டு மாவட்ட அளவிலான சமையல் போட்டி நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கீழராஜ வீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக சத்துணவு பிரிவு உதவியாளர் இரா.முருகேசன் நடைப்பெற்ற சமையல் போட்டிக்கு தலைமை வகித்தார். வரவேற்புரையை தலைமையாசிரியார் சித்ரா வழங்கினார். நன்றியுரை உதவி கணக்கு அலுவலர் இரா. விஜயராகவன் வழங்கினார். இப்போட்டியின் நடுவர்களாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், மாவட்ட திட்ட அலுவலர் ( ஒ.கு.வ.திட்டம் ) மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆகியோர் இருந்தனர்.

நடுவர்கள் அளித்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாவட்ட அளவில் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான சிறந்த சத்துணவு சமையலர்க்கான விருதிற்கு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சமையலர் எஸ்.மல்லிகா என்பவரும், உதவியாளர்க்கான விருதிற்கு தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெ.சுதா என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், சிறப்பான முறையில் உணவு தயாரித்திருந்த மதுக்கூர் ஊராட்சி ஒன்றிந்தஃதைச்சேர்ந்த சமையலர் கே.அஞ்சம்மாள் என்பவர் முதல் பரிசுக்கும், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சமையலர் சி.அபிராமி என்பவர் இரண்டாம் பரிசுக்கும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சமையல் உதவியாளர் எஸ்.அபிராமசுந்தரி மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்படுள்ளனர். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here