கவரப்பேட்டை, சனவரி, 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ….

மத்திய அரசுடன் சுமூக உறவில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கவரப்பேட்டையில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் அமமுக கட்சியின் திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டியம்மாள் இல்லத் திருமண விழாவிற்கு வருகைத் தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற டி.டி.வி தினகரன் திமுக – பாஜக கூட்டணி உருவாகுமோ என்ற செய்தியாளர்களின் யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு, பதிலளிக்க தான் ஒன்றும் வானிலை ஆராய்ச்சியாளர் இல்லை என்றார்.

மேலும் அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால் மத்திய அரசுடன் மாநில அரசு சுமூக உறவில் இருக்க வேண்டும் என்றார். அதனை விட்டு விட்டு, திராவிட மாடல் என சொல்லி கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது மத்திய அரசின் தயவு வேண்டும் என்பதால் பல்வேறு வேஷங்களை போட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டு மக்கள் நடைப்பெற்று வரும் அனைத்தை அரசியல் நிகழ்வுகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் எனவும், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவிற்கு பாராளுமன்ற தேர்தல் உட்பட எதிர்வரும் அடுத்தடுத்தத் தேர்தல்களிலும் மக்கள் திமுகவிற்கு சரியானப் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு வாய்ப்பு உள்ளதா என்பதே தெரியவில்லை எனவும், குழு அமைத்து ஆராய்ந்து வருவதாகவும், அதற்கான சூழல் உருவாகுமா எனவும் தமக்கு தெரியவில்லை என்றார். கூட்டணி தொடர்பாகவும், ஓபிஎஸ்சுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த கேள்விகளுக்கு தேர்தல் அறிவிப்பு வரும் வரை, சற்று பொறுத்திருந்து பார்க்குமாறு தினகரன் பதிலளித்தார்.

இந்நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் செந்தமிழன், மாவட்ட அமமுகச் செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற  செயலாளர் ராம்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுரேஷ், சதீஷ், தமிழ்மணி, டி.என்.பழனி, முனுசாமி, ஆரணி தன்ராஜ், பொன்னேரி தயாளன், மற்றும் அமமுக கட்சியின் பொறுப்பாளர்கள் பானுமதி, மாலதி, கும்மிடிப்பூண்டி பழனி, உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here