கொரட்டூர், அக்.20- அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூ.3.42,335 யும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சாந்தி நகர் 2வது தெருவில் வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வில்லிவாக்கம், கொரட்டூர், பாடி, கள்ளிகுப்பம், கிழக்கு பானு நகர், மாதானங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நிலங்களை வாங்க, விற்க அடமானம் வைக்க பத்திரப் பதிவு, வில்லங்க சான்று, திருமணப்பதிவு உள்ளிட்டவைகளுக்கு வந்து செல்கின்றனர். இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து தங்களது பணிகளை நிறைவேற்றி செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் நில மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்வது, கோயில் நிலம், நீர் நிலைகளின் சர்வே எண்ணை மாற்றி பத்திரப்பதிவு செய்வது, நள்ளிரவில் நேரங்களில் புரோக்கர்கள் உதவியுடன் பத்திர பதிவு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றதாகவும், அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 12 போலீசார் அடங்கிய குழுவினர் வில்லிவாக்கம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்தனர்.
இதனைப் பார்த்த சில புரோக்கர்கள் உள்ளே இருந்து வெளியே தப்பி ஓடினர். ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். மேலும், போலீசார் அலுவலக கதவை பூட்டிக் கொண்டு உள்ளே, வெளியே யாரையும் விடாமல் அதிகாரிகள், ஊழியர்கள், புரோக்கரிடம் தனித் தனியாக சோதனை செய்தனர். இதனை யடுத்து, அவர்களில் சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்காமல் இருக்க தங்களது பணம், ஆவணங்களை அலுவலகத்தில் அங்கு மிங்குமாக வீசினார்கள். பின்னர், போலீசார் சார்பதிவாளர் உள்ளிட்ட ஊழியர் களிடம் கிடுக்கிப் பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கணக்கில் வரா பணம் ரூ.3,42,335 ம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை இரவு வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையால் கொரட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி; ஆவடி ராஜன்