தற்போது நிலவிவரும் வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு, மாநில அரசு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத வேளாண் பெருமக்களின் நலன்கருதி, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1,510 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. நடப்பு 2019-20 ஆம் ஆண்டில் மேலும், 304 மையங்கள் அமைப்பதற்கு ரூ.30.40 கோடி நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று வேளாண் பணிகளை காலத்தே மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார அளவிலான ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். இம்மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு கிடைக்கும். அதன் மூலம் சாகுபடிப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு, விவசாயிகள் நல்ல மகசூல் பெற முடியும்.இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்வரலாம். இம்மையங்களை நடத்த முன்வருபவர்கள் அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள் மற்றும் மண்ணின் தன்மைக்கேற்றவாறு, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்புபவர்கள் வேளாண்மைப் பொறியியல் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தயாரித்த இயந்திரங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான இயந்திரங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், பயன் பெற விரும்புபவர்கள், முதலில் அதற்குரிய

விண்ணப்பத்தினை தங்களது வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும். வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் மூதுரிமை பதிவேட்டில் முறையாக பதிவு செய்யப்பட்டு, அதனடிப்படையில், விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்தத் தகவல் கிடைத்தவுடன், தமக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்தத் தொகையினை சம்பந்தப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய வரைவோலையின் நகலினை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். பின்னர், வேளாண்மைப் பொறியியல் துறையின் மாவட்ட செயற் பொறியாளர் அவர்களால் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவருக்கு உரிய வழங்கல் ஆணை (supply order) வழங்கப்பட்டு, கோரிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் அம்மையத்துக்கு முகவரால்

வழங்கப்படும். இவ்வாறான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக தங்களது பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் வருவாய் கோட்ட உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான செயற் பொறியாளர் அலுவலகத்தையோ அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு, கீழ்க்காணும் முகவரியினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேளாண் பெருமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600 035.  

மின்னஞ்சல்:aedcewrm@gmail.com தொலைபேசி எண்கள்: 044-29515322, 044-29510822, 044-29510922

 மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விபரங்களை, உழவன் கைபேசி  செயலியில், மானியத் திட்டங்கள் எனும் பகுதியினைத் தேர்வு செய்து, அதில் CHC- வேளாண் இயந்திர வாடகை மையம் என்னும் பக்கத்தில், மானிய விபரம், தகுதி, தேவையான ஆவணங்கள் போன்ற விபரங்கள் அனைத்தையும் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here