காஞ்சிபுரம், ஆக. 07 –
காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் (ஆன்ரசன்) பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆறு பேருக்கு திடீர் வந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இம்மாணவர்கள் பள்ளி வளாகத்தின் அருகேவுள்ள தள்ளு வண்டி கடையில் ரஸ்னா பவுடர் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஆறு மாணவர்களும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளி நிருவாகம் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆறு மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரியபடுத்தப்பட்டது. சிகிச்சைப்பெற்று வந்த ஆறு மாணவர்களில் ஐந்து மாணவர்கள் முதலுதவி செய்த பிறகு மீண்டும் பள்ளிக்கு திரும்பினர். அதில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் மட்டும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து தெரிய வந்த தகவலில், பள்ளி உணவு இடைவெளி நேரத்தில் பள்ளி வளாகத்தின் அருகே மூதாட்டி ஒருவர் வைத்திருந்த தள்ளு வண்டி கடையில் வாங்கிய ரஸ்னா பவுடரால் ஆறு மாணவர்கள் மயக்கமடைந்ததாக தெரிய வருகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து சிவ காஞ்சி போலீசார் பள்ளி ஆசிரியை மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.