திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று திருவள்ளூர் நகராட்சி எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உதயகுமார். இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை மையமாக வைத்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.
தற்போது மரம் வளர்ப்போம், பறவைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரையில் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் காமராஜர் சிலை முன்பு பயண தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன், பாடலாசிரியர் க.முரசு முருகன், ஆகியோர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பயணத்தை தொடங்கினார்.
இந்தப் பயணமானது திருவள்ளூரில் தொடங்கி தெலங்கானா, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், பிகார் உள்பட 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரையில் 18 நாள்களில் இந்த பயணம் நிறைவு செய்யப்படும் என தெரிய வருகிறது.