திருவண்ணாமலை, செப்.25-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் ரூ.45 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ஷெட்டர்களை மாற்றியமைக்கும் பணியை மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூரில் தென்பெண்ணையாற்றில் 119 அடி உயரமுள்ள அணை கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் சாத்தனூர் அணையில் ஆய்வு செய்த போது ஷெட்டர்கள் பலவீனம் அடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து 20 ஷெட்டர்களையும மாற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்து அதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து ரூ.45 கோடி மதிப்பில் 20 ஷெட்டர்களையும் மாற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய நீர்வள ஆணையர் துணை இயக்குநர் ஆனந்த்பிரகாஷ், மற்றும் உலக வங்கி பிரதிநிதி வினித் பட்டியா உள்ளிட்டோர் ஷெட்டர்களை மாற்றியமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும். புதிய ஷெட்டர்களின் உறுதி தன்மை தரமாக இருக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டனர் மேலும் பணியின் தரத்தில் சமரசம் கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) ராஜேந்திரன், திட்ட இயக்குநர் ராணி, கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here