பாகிஸ்தான் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் சல்மான் பட். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவில் ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.
தடைக்காலம் கடந்த 2016-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் மட்டுமே விளையாடி வந்தார்.
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் முகமது ஹபீஸ் இடம்பிடித்திருந்தார். தற்போது அவர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சல்மான் பட்டை அணி தேர்வு செய்துள்ளது.
இதனால் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார். மிகப்பெரிய தொடருக்கு திரும்பியது குறித்து சல்மான் பட் கூறுகையில் ‘‘என்னால் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
அவருடன் தண்டனை பெற்ற முகமது அமிர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.